23

 

இன்னார்க்கும் இனிய தமிழினியாள்

இன்று சீறுகின்றாள்!

கடலடி சென்று புதைகுழி ஆனதால்

சீறுகின்றாள்!

குமரியாய் உலகத்து வானில்

சங்க ஓவியத் தூரிகை வரைந்த

வானவில்லாய் இலங்குகிறாள்!

பணம் பெருக பைந்தமிழை

மாற்றியவர் பலரிருக்க

பண்பாடைக் கற்றுக் கொடுக்க

மறந்த சிலர் தீந்தமிழ் ஓவியத்தை

தீக்கடைக்கோலாய் கொல்(ள்)கின்ற சமுதாயம்

கண்டு சீறுகின்றாள்!

இனிய பாடவழி தமிழாய்வு முறை

காண சீறுகின்றாள்!

இனிய தமிழ் இனி இணையம் வழி

மெல்லத் தழைக்கும்நாளும் வந்திடாதோ!

என புலம்புகிறாள்!

முழுமையாய் முத்தமிழும்

முழுநிலவாய் வெளி வரும்

நாள் காண சீறுகின்றாள்!

மொழி தெரியா இனக் கூட்டம்

முறை தவறி அழிக்குங்கால்

மூவுலகும் காத்திடவே

செம்மாழியாய் சீறுகின்றாள்!

இன்னார்க்கும் இனிய தமிழ்

இனி எல்லார்க்கும்

பாகல் தான்!

செந்தமிழ் தழைக்கப் பேசுவார்

யாருமில்லை!

மொழி தழைக்கப்

பேசும் யாவரும்

மூலையில் தான்

பேசுகின்றார்!

மெல்லத் தமிழ்

சிறக்குமென

சொல்வாரும் மெல்லவே

மனதிற்குள் இனிய தமிழ்

இனி மெல்லச் சாகும்

என அழுதாரே!

இனிய தமிழ்

இனி தழைக்கும் வழி காணும்

நாள் எந்நாளோ?

 

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சோலை வனம் - கவிதைகள் Copyright © 2015 by இரா. பாரதி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book