40 புத்தகத்தின் கண்ணீர் தேடல்

 

 

அங்காடித் தெருவில் அங்குலமாய் என்னை

அணைக்க விழிக்கதவின் உப்புநீர் மட்டுமே

உன்னிடம் இருந்ததை நான் அறிந்தேன்!

பாதம் நோக காத தூரம் நீ நடக்க

கல்விச்சோலையாய் என் உறவுகளின்

நூலக அணிவகுப்பு!

நூலகத்தில் கறையான்கள் மட்டுமே குடியிருக்க

உரமாய் நானிருக்க உன்னுள் அறிவு மல்லிகையாய்

நான் மலர்ந்தேன்!

நெருஞ்சி முள்ளாய் உறவுகள் உரச

உப்புநீரால் என் தேகத்திற்கு

அன்றுதான் குளியல்!

கண்ணிமை ஈரம் துடைக்க நானே

அறிவு மருந்தானேன்!

பல்லாண்டு கடந்தாலும் தொலைந்து போன

மதலை முகம் தேடி அலைகின்றேன்!

பட்டம் பல பெற்று வரதட்சணை வீதியில்

தொலைந்தாயோ?

மாதந்தோறும் வரதட்சணை அமுதசுரபியாய்

மாறினாயோ?

காலச்சக்கரத் தேரோட்டத்தில் தும்பைப்பூ தேகம்

துகளாய் மாறி உதிர்ந்து விடும்

வேதனையில் நான்!

அறிவுத் தேடலை அகண்டமாக்கிய

இனிய உறவே!

என்னை அழிவில்லாமல் செய்திட வருவாயோ?

Feedback/Errata

Comments are closed.